Wednesday, 11 October 2017

அரசியல் மறுமலர்ச்சி

ஊழலற்ற சமுதாயம் வரவேண்டும் என்றால் நம் அரசியல் அமைப்பு சட்டத்தில், சில என்ன, பல திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்.
அரசு அதிகாரிகளின் வயதுவரம்பு படிப்பு தகுதி ஆகியவற்றை பார்த்து அவர்களை பதவியில் அமர்த்துவது போல, மத்திய மாநில அரசை ஆளும் அரசியல்வாதிகளுக்கும் இதுபோல தகுதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயிக்க வேண்டும், அதற்க்கு மத்திய அரசின் பாராளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் தர வேண்டும், அது நடப்பது என்பது கேள்விகுறி தான். குறிப்பிட்டவைகளுக்கு சட்டத்திருத்தம் மசோதா என்று போடாமல், மொத்த அரசியல் சாசனங்களையும் பல நாட்டின் சட்ட வல்லுநர்கள் மற்றும் நம் நாட்டின் மூத்த சட்ட வல்லுநர்கள் முன்னாள் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் மற்றும் இந்நாள் சட்டத்துறை அமைச்சர்கள் எனவும் மற்றும் அணைத்து மாநிலங்களிலிருந்தும் ஒரு உறுப்பினர் (அவர் கண்டிப்பாக மிக மூத்த மற்றும் அணுபவமிக்க சட்ட நிபுணராக இருத்தல் வேண்டும்) . இந்த மாற்றத்தில் முக்கியமாக அரசியல் கட்சி நடத்துபவரின் அடிப்படை தகுதிகள், பதவி வாரியாக மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினருக்கான தகுதி மற்றும் மாநிலத்தின் ஆளுநர்கள் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி , இந்திய காவல்பணி மற்றும் முன்னாள் நீதிபதிகள் ஆகியோராகத்தான் இருக்கவேண்டும் எனவும் மாற்றம் கொண்டு வர வேண்டும். 
இது போல சில திருத்தும் கொண்டு வந்தால் தான் தற்போதைய சுழலுக்கேற்றார் போலும் , எதையும் சமாளிக்க கூடிய திறமை மிகுந்த அரசியல் தோழர்கள் கிடைப்பார்கள் .

நன்றி,
மு.விக்னேஷ்

சர்வதேச பெண்(பொன்)குழந்தைகள் தினமாம்...11-10-2017

சர்வதேச பெண்(பொன்)குழந்தைகள் தினமாம்... இது கடந்த 5 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

அனைத்திலும் ஆகச்சிறந்தவளாக ஆன அவள்,
அவனிடம் எதிர்பார்க்கும் ஒன்று அன்பு, மற்றொன்று பாதுகாப்பு.

அவள் எதிர்பார்ப்பு தவறென்பேன்,
சின்னஞ்சிறு பிள்ளையெனும் பாராமல், இன்று
அப்பாவி கொடும்பழி தீர்க்கிறான்,
அவள் செய்த பாவம் பெண்ணாய் பிறந்ததோ!

அவனை விட உடலளவில் பெரும் துயரை
அனுபவிக்கும் அவள், கேட்கும் ஒன்று அவளுக்கான அப்பழுக்கற்ற சமதர்ம சுதந்திரம்!

அவன் ஆறறிவு உச்சத்தில் பெற்று என்ன பயன், அமுதவளை மதிக்க மறந்து.

பெண்ணாய் பிறந்தவர்க்கும், பெண்களை பெற்றவர்க்கும் , எம் மரியாதை கலந்த வாழ்த்துக்கள் ....
வணக்கம்!!!

முதியவரிடம் இளமையான ஓர் சந்திப்பு- பேருந்தில்

நேற்று, சனிக்கிழமை, பேருந்தில் இலால்குடி-திருச்சிக்கு பயணப்படும் போது, சமயபுரம் டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெரியவர் ஏறினார். என் அருகே உள்ள இருக்கையில் வந்து அவர் அமர்ந்தார். காவிரி பாலத்தில் பேருந்து கடக்கும் பொழுது, அப்பெரியவர் தன்னை அறியாது புலம்பினார், தண்ணீர் இன்றி முள்புதரான காவிரியை கண்டு. அருகில் என்னை கண்டவுடன், என்னிடம் சொன்னார், "சார் எனக்கு வயது 93 (TNEB Rtd), என் மனைவிக்கு 87, என் மகன்களில் ஒருவர் சிங்கப்பூரிலும், ஒருவர் டவுனிலும் உள்ளனர், என் மகளுக்கோ திருமணமாகி திருமண வயதில் ஒரு பெண் உள்ளார் " என்றெல்லாம் உரிமையுடன் மூன்றாம் மனிதரான என்னிடம் கூறினார். ஜெ மறைவுக்கு பின்னர் நடந்த அரசியல் நகர்வுகளைப் பற்றியும், கருணாநிதி நிலைப்பற்றியும், மோடியின் நகர்வுகளைப்பற்றியும் விவாதித்தோம். அப்பெரியவர் தன் அனுபவங்களில் பல அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களை கண்டுள்ளதாகவும் அவர்களை பாராட்டியும் விமர்சித்தும் பல கருத்துக்களை முன்வைத்தார். அப்படி பேசிக்கொண்டு இருக்கையில் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் ஆளுமை திறனை உச்சாணி கொம்பில் வைத்து புகழ்ந்தார். கலைஞரின் தமிழ் பற்றியும் பேச அவர் மறக்கவில்லை. 1947ல் EBல் வேலைக்கு சேர்ந்து ரூ.6.00 மாதச்சம்பலமாக பெற்றதையும் கூறிய அவர். பிறந்த நாள் முதலே திருச்சியில் வாழ்வதால் இவ்வூரின் வளர்ச்சியை கடந்த 90 வருடமாக கண்டுள்ளதையும், இன்றும் காண்பதையும் அவர் கூறினார். திருச்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு காங்கிரஸ் காரர்கள் என்றார் அவர். ஓர் ஆச்சர்ய குறியீடாக என் முகம் மாறியதை கண்ட அவர், சிறித்துக் கொண்டே சொன்னார், "சார் 1950 களில் இருந்த காங்கிரஸை சொன்னேன், இன்றையது அல்ல" என்று. துப்பாக்கி தொழிற்சாலை, பெல் நிறுவனங்கள் திருச்சியில் வர காரணமாக இருந்தவர்கள் இராஜாஜி, காமராசர் மற்றும் பக்தவட்சலம் போன்றோர் என்றார் அவர். 93வது இளைஞரிடம் இறங்கும் முன் கேட்டேன், "டவுனுக்கு ஏன், ஏதும் முக்கியமான வேலையோ" என்றேன். சிரித்துக் கொண்டே சொன்னார், "காபி தூள் வாங்க வந்தேன் என்று"... நன்றி, மு.விக்னேஷ்